கதுவா சம்பவம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி அதிகாரி மீது வழக்குப்பதிவு

கதுவா சம்பவம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Kathua
கொச்சி,
காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து டிஸ்மிஸ் ஆன வங்கி அதிகாரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரில் தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்த விஷ்ணு நந்தகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார்.
அதில், ''நல்லவேளை அந்த சிறுமி கொல்லப்பட்டுவிட்டார். ஒருவேளை அவர் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறினாள், இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக மாறுவாள்'' என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு கேரளா மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஷ்ணு பணியாற்றும் வங்கிக்கு ஏராளமானோர் மின்னஞ்சல் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.
விஷ்ணுவுக்கு எதிராக டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி கண்டனம் தெரிவிக்கும் வகையில் உருவானது. இதையடுத்து, அந்த தனியார் வங்கி, விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகள், தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில், பனங்காடு போலீஸார் விஷ்ணு மீது இந்திய தண்டனைச்சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story