‘வங்கிகளின் அமைப்பையே பிரதமர் மோடி அழித்துவிட்டார்’ ராகுல் காந்தி பாய்ச்சல்


‘வங்கிகளின் அமைப்பையே பிரதமர் மோடி அழித்துவிட்டார்’ ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 17 April 2018 12:24 PM GMT (Updated: 17 April 2018 12:24 PM GMT)

வங்கிகளின் அமைப்பையே பிரதமர் மோடி அழித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்து உள்ளார். #PMModi #RahulGandhi #CashCrunch #CashlessATMs



புதுடெல்லி,

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, டெல்லி உள்படப் பல மாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. ஏடிஎம்களில் பணம் இல்லாமல் சென்றது தொடர்பாக நிதிமந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும்,  தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாமல் சென்று உள்ளதை அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், “பல மாநிலங்களில் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற நிலை காணப்படுகிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் இல்லை. இது உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை காட்டுகிறது. தேசத்தில் நிதி நெருக்கடி நிலை தொடர்கிறது?” என கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் வங்கிகளின் அமைப்பையே பிரதமர் மோடி அழித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்து உள்ளார். 

வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியே இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பாகும், பிரதமர் மோடி வங்கிகளின் அமைப்பையே அழித்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். அமேதி மற்றும் ரேபரேலிக்கு மூன்றுநாள் பயணமாக சென்று உள்ள ராகுல் காந்தி பேசுகையில், “நிரவ் மோடி ரூ. 30 ஆயிரம் கோடியுடன் ஓடிவிட்டார், பிரதமர் மோடியிடம் இருந்து ஒரு பதிலும் கிடையாது. நம்மை வரிசையில் நிற்க கட்டாயப்படுத்தினார்கள்,  நம்முடைய பையில் இருந்து 500, 1000 ரூபாய்களை பறித்து நிரவ் மோடியின் பையில் போட்டுவிட்டார்கள்,”என்றார். 

இந்தியாவில் மிகப்பெரிய 15 தொழில் அதிபர்களின் ரூ. 2.5 லட்சம் கடனை தள்ளுபடி செய்து பிரதமர் மோடி வங்கி அமைப்பை அழித்துவிட்டதன் காரணமாகவே வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என விமர்சனம் செய்து உள்ளார் ராகுல் காந்தி. மோடியின் அரசு மற்றும் கொள்கையானது பணக்காரர்களுக்கானது, ஏழைகளுக்கானது கிடையாது. இதன் காரணமாக மோடியின் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கான காரணமாகும் என கூறிஉள்ளார் ராகுல் காந்தி.


Next Story