டி.டி.வி.தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வாதம்


டி.டி.வி.தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 17 April 2018 10:30 PM GMT (Updated: 17 April 2018 7:36 PM GMT)

பொதுச்செயலாளர் இல்லாமல் அ.தி.மு.க. இயங்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி. தினகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, டி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னத்தையும், அவர்கள் அணிக்கு முன்வைக்கும் பெயரை பரிசீலனை செய்து ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து மதுசூதனன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், செம்மலை ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி ஏப்ரல் மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தரப்பில், பொதுச்செயலாளர் பதவியை கட்சியில் மீண்டும் கொண்டு வரவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யவும் கோரி மனுதாக்கல் செய்தார். இதற்கு நீதிபதிகள் முதலில் பிரதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்றனர்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் கபில் சிபல்:- கட்சியின் பிரதான உறுப்பினர்கள் அழைக்கப்படாமல் பொதுக் குழுவை கூட்டி புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே சமயம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை ஒரு சாராருக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது முற்றிலும் விதிமுறைகளை மீறிய நடவடிக்கை என்றார்.

நீதிபதிகள்:- ஒவ்வொரு பிரமாண பத்திரத்தையும் தனித்தனியாக சரிபார்க்க முடியாது.

கபில் சிபல்:- 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சசிகலா தரப்பினருக்கு பெரும்பான்மை இருந்தது. பின்னர் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. பொதுச்செயலாளர் தான் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ஆனால் தற்போது பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லாமல் கட்சியை நடத்துகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

நீதிபதிகள்:- அப்படி என்றால் கட்சி தற்போது எப்படி இயங்குகிறது?.

கபில் சிபல்:- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் மூலம் நடத்தி வருகிறார்கள். தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு எந்த சட்ட அடிப்படையும் அற்றது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர் விசாரணை 20-ந் தேதி தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

Next Story