கர்நாடகாவில் ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். #KarnatakaFakeCurrency
பெலாகாவி,
கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடம் ஒன்றில் ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெலாகாவியில் அமைந்திருக்கும் ஏபிஎம்சி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்றிரவு அக்கட்டிடத்தில் சோதனையிட்ட போலீசார், ரூ. 5 கோடி மதிப்பிலான 2000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகளும் அதில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீஸ் கமிஷனர் டி சி ராஜப்பா புலனாய்வு மேற்கொண்டார். மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக இந்த கள்ள நோட்டுகள் கொண்டு வரப்பட்டனவா? எனப் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story