பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா முதலிடம்; மராட்டியம் மோசம்


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா முதலிடம்; மராட்டியம் மோசம்
x
தினத்தந்தி 19 April 2018 11:03 AM GMT (Updated: 19 April 2018 11:03 AM GMT)

பாரதீய ஜனதா கட்சியே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய அதிகமான எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #BJP #CrimeAgainstWomen

புதுடெல்லி,
 
ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையின்படி, பாரதீய ஜனதாவிலே அதிகமான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகளை எதிர்க்கொண்டு வருகின்றனர் என தெரியவந்து உள்ளது. 

இப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களின் 4,896 வேட்பு மனுக்களில் 4,845 வேட்பு மனுக்களை இரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்து உள்ளது. 768 எம்.பி.க்கள் மற்றும் 4,077 எம்.எல்.ஏ.க்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்து உள்ளது. இதில் 1,580 (33 சதவிதம்) எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர், அவர்களில் 48 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். 

இதில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் பாரதீய ஜனதா முதலிடம் பிடிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உள்ளது.

பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவித்து உள்ளனர். இதுபோன்று சிவசேனா 7 உறுப்பினர்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 6 உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு முக்கிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது தொடர்பான தகவலும் இடம்பெற்று உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகளை எதிர்கொண்ட 47 வேட்பாளர்களுக்கு பாரதீய ஜனதா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இதுபோன்று 35 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 25 வேட்பாளர்களையும் களமிறக்கி உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
 மராட்டியத்தில் இதுபோன்று வழக்குகளை எதிர்கொள்ளும் 12 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம்(11), ஒடிசா மற்றும் ஆந்திரா (5) உள்ளது. பெண்களை கடத்துதல் மற்றும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தல், பாலியல் பலாத்காரம், சிறார்களை பாலியல் தொழிலுக்காக வாங்குவது, பெண்களை அவமதிக்கும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்துதல் மற்றும் சைகைகளை மேற்கொள்ளுதல் ஆகிய குற்ற சம்பவங்கள் அறிக்கையில் இடம்பெற்று உள்ளது. கொடூரமான குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் இடம் கொடுக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அது தொடர்கிறது.

உத்தரபிரதேச மாநில உன்னோவ் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story