கத்துவா, உனாவ் கற்பழிப்புகளை கண்டித்து காங்கிரஸ் பேரணி; பெண் நிர்வாகிகளிடம் சில்மிஷம்

கத்துவா, உனாவ் கற்பழிப்புகளை கண்டித்து நடந்த காங்கிரஸ் பேரணியில் பெண் நிர்வாகிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது பற்றி கட்சி தலைமைக்கு பெண் தொண்டர் புகார் தெரிவித்துள்ளார். #CandleMarch
மும்பை,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், உத்தர பிரதேசத்தில் உனாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் கற்பழித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட டீன் ஏஜ் சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார். இதற்கு எம்.எல்.ஏ. பின்னணியில் செயல்பட்டார் என அந்த சிறுமி புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தினை கண்டித்து ஜுஹு நகரில் காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஞாயிற்று கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.
இந்நிலையில், மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபத்திற்கு கட்சியின் மாவட்ட அளவிலான பெண் தொண்டர் ஒருவர் ஆண் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நிருபம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் என்.எஸ்.யூ.ஐ. (கட்சியின் மாணவர் அணி) ஆகியோர் பெண் நிர்வாகிகளிடம் மிக கீழ் தரமுடன் நடந்து கொண்டனர்.
அவர்கள் பெண் தொண்டர்களை தொடுவதும், தள்ளி விடுவதும் மற்றும் மோதுவதும் என தகாத முறையில் நடந்தனர். நமது கட்சியின் ஆண் உறுப்பினர்களாலேயே பாதுகாப்பற்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது என புகாரில் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து அந்த பெண் உறுப்பினர், பேரணியில் முன்னால் சென்றால் ஊடகத்தினர் தங்களது முகங்களை படம் பிடித்து வெளியிடுவார்கள் என்பதற்காக சில ஆண்கள் எங்களை தள்ளி விட்டு முன்னே ஓடினர். வருங்காலங்களில் இதுபோன்ற பேரணிகள் நடக்கும்பொழுது பெண்கள் பாதுகாப்புடன் இருக்க முடியுமா? என்றும் புகாரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது துரதிர்ஷ்டம் நிறைந்தது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என கூறியுள்ள நிருபம், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக மன்னிப்பு கேட்டு கொண்டேன். பேரணிகளில் பெருமளவில் பெண்களும் கலந்து கொண்டால் பின்பற்ற வேண்டிய விதிகளை வெளியிட்டு உள்ளேன். அதனை பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.