ஸ்ரீசாந்த் மேல்முறையீடு கிரிக்கெட் சூதாட்ட வழக்கை ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்


ஸ்ரீசாந்த் மேல்முறையீடு கிரிக்கெட் சூதாட்ட வழக்கை ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 May 2018 10:15 PM GMT (Updated: 15 May 2018 8:26 PM GMT)

ஸ்ரீசாந்த் மேல்முறையீடு. கிரிக்கெட் சூதாட்ட வழக்கை ஜூலைக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் உள்ளிட்ட 36 பேர் 2013–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின்போது ‘ஸ்பாட்–பிக்சிங்‘ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த இந்திய கிரிக்கெட் வாரியம், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்துக்கு ஆயுட்கால தடை விதித்தது.

இவர்கள் 36 பேரையும் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து 2015–ல் டெல்லி பாட்டியாலா அவுஸ் கோர்ட்டு விடுவித்தது. இதற்கு எதிராக டெல்லி போலீசார் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே கேரள ஐகோர்ட்டின் டிவி‌ஷன் பெஞ்ச் தனக்கு விதித்த தடையை நீக்ககோரி ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஸ்ரீசாந்திடம் கிரிக்கெட் ஆடவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் அவர் டெல்லி ஐகோர்ட்டின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே, அவர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீதுள்ள சூதாட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு வருகிற ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டனர்.


Next Story