தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: மே 18-ந் தேதி கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை


தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: மே 18-ந் தேதி கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2018 8:05 AM GMT (Updated: 16 May 2018 8:05 AM GMT)

டெல்லி தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வரும் மே 18-ந் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். #CSAssaultCase #Kejriwal

புதுடெல்லி,

டெல்லி மாநில அரசின் ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நள்ளிரவு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் அன்ஷூ பிரகாஷை தாக்கினர்.

மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சிவில் லைன் போலீசில் தலைமை செயலாளர் புகார் செய்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால், அமானத்துல்லா கான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு டெல்லி போலீசார் கைது செய்தனர். மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தலைமை செயலாளர் தாக்கப்பட்டதை டெல்லி போலீசார் உறுதி செய்தனர்.

தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 11 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்திய போலீசார் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமாரிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணையின் அடுத்தக்கட்டமாக வரும் மே 18-ந் தேதி காலை 11 மணிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிஷோடியா மற்றும் கெஜ்ரிவாலின் முன்னாள் ஆலோசகர் விகே ஜெயின் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டெல்லி போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Next Story