“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு


“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2018 9:20 AM GMT (Updated: 17 May 2018 9:20 AM GMT)

மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சி செய்கிறது என தெலுங்கு தேசம் குற்றம் சாட்டிஉள்ளது. #TirumalaTemple #TDP

அமராவதி,

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது. 

கோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது. சமீபத்தில் தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழவும் சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்ப பெற்றது. திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களை 65 நிரம்பியவர்களுக்கு கட்டாய ஓய்வு என தேவஸ்தானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை வாரியம் முடிவு எடுத்து உள்ளது. 

இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமனா தீட்சிதுலு, கோவில் நிர்வாகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இப்போது தலைமை அர்ச்சகருக்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என தெலுங்குதேசம் குற்றம் சாட்டிஉள்ளது. தொல்லியியல் துறையின் வாயிலாக திருப்பதி கோயிலை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என தெலுங்குதேசம் குற்றம் சாட்டிஉள்ளது.
 
   தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச பிராமின் பரிஷத்தின் சேர்மனுமான வெமுரி ஆனந்த சூர்யா பேசுகையில், “தீட்சிதுலுவின் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் டெல்லியில் வலுவாக இருக்கும் படைகள் உள்ளது,” என கூறிஉள்ளார். 

தன்னுடைய சமீபத்திய குற்றச்சாட்டுகள் காரணமாக தெலுங்கு தேசம் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையிலான அறக்கட்டளை வாரியம் அரசியல் முடிவை எடுத்து உள்ளது என தீட்சிதுலு குற்றம் சாட்டினார். ஆனால் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்தவர் இப்போது குற்றம் சாட்டுவது ஏன்? என தெலுங்கு தேசம் தலைவர் ஆனந்த சூர்யா அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சூர்யா பேசுகையில், “அவர் (தீட்சிதுலு) ஏன் சென்னை சென்று பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேச வேண்டும்? புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னர் தேவஸ்தானத்திற்கு எதிராக பேசுவதின் பின்னணி நோக்கம் என்ன? தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பின்னர்தான் அவர் முறைகேடுகளை பார்த்தாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். 

  நாட்டில் உள்ள அனைத்து நிர்வாகத்தையும் கையகப்படுத்த வேண்டும் என்ற பாரதீய ஜனதாவின் முயற்சியின் ஒரு பங்குதான் அர்ச்சகர் தீட்சிதலுவின் குற்றச்சாட்டுகளாகும் என கூறிஉள்ளார் ஆனந்த சூர்யா. தீட்சிதலு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின ஆதரவாளர் எனவும் தெலுங்கு தேசம் கூறிஉள்ளது. விஜயநகர மன்னர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு கொடுத்த விலை உயர்ந்த நகைகள் மோசடி செய்யப்பட்டு உள்ளது என்ற தீட்சிதலுவின் குற்றச்சாட்டை நிராகரித்த ஆனந்த சூர்யா, “2004  முதல் 2014 வரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் கூறாதது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆந்திர பிரதேசத்தை சீர்குலைக்க வேண்டும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் இணைந்து மாநிலத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வலுவான மத்திய அரசின் சதிதிட்டத்தின் ஒரு சிப்பாய்தான் தீட்சிதலு என்பது தெளிவாகிறது.” என கூறிஉள்ளார்.  

இதற்கிடையே தேவதஸ்தானத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கிருஷ்ணா ராவ் பேசுகையில், திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு 65 நிரம்பியதும் கட்டாய ஓய்வு என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. “அர்ச்சகர்கள் ஒன்றும் அரசு அதிகாரிகள் கிடையாது, அவர்கள் சம்பளம், பணி உயர்வு எதையும் பெறவில்லை. அவர்களுக்கு கட்டாய ஓய்வு முறையானது ஏற்றது கிடையாது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேவை செய்பவர்கள் ஆவர். அறக்கட்டளையின் புதிய நகர்வு, தெலுங்கு தேசம் அரசு அவருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்பதாகவும் பார்க்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.  

Next Story