சென்னை மீன்பிடி துறைமுக நிர்வாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்


சென்னை மீன்பிடி துறைமுக நிர்வாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:40 PM GMT)

சென்னை மீன்பிடி துறைமுக நிர்வாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மீன்வளத்துறை மந்திரிகள் மாநாட்டில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் கடலோர மாநிலங்களின் மீன்வளத்துறை மந்திரிகள் பங்கேற்ற தேசிய மாநாடு டெல்லி கிருஷி பவனில் நேற்று நடைபெற்றது. மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இயக்குனர் சமீரான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் தமிழக அரசின் மீன்வளத்துறை குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

சர்வதேச கடல் எல்லைக்கோடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், கடலில் திசை மாறிச்செல்லும் மீனவர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது. இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 168 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீன்பிடி படகுகளை கண்காணித்தல் மற்றும் தேடும் பணிகளை மேற்கொள்ள கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய தேசிய அளவில் கொள்கைகளை உருவாக்கி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் மற்றும் காணாமல் போகும் மீனவர்கள் குடும்பத்தினரின் நலனை உறுதி செய்யும் திட்டங்களை உருவாக்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடலோர பகுதியில் உள்ள முகத்துவாரங்களை நிரந்தரமாக திறந்துவைப்பதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னை மீன்பிடி துறைமுக மேலாண்மை நிர்வாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீன்வளத்திற்கென பிரத்தியேகமாக மீன்வள அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், ‘கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக முகத்துவாரங்களை திறந்து வைத்தல், செயற்கை இனவிருத்தி தளம் அமைத்தல் போன்ற பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பா.ஜனதா கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. கட்சி வளர வேண்டும் என்றுதான் எல்லா கட்சிகளும் ஆசைப்படும். அதற்கு செயல்வடிவம் மக்கள்தான் கொடுக்க வேண்டும்’ என்றார்.


Next Story