கர்நாடக தேர்தல் : ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவை மட்டும் அழைத்தது ஏன் -சுப்ரீம் கோர்ட் கேள்வி


கர்நாடக தேர்தல் : ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவை மட்டும் அழைத்தது ஏன் -சுப்ரீம் கோர்ட் கேள்வி
x
தினத்தந்தி 18 May 2018 11:14 AM IST (Updated: 18 May 2018 11:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவை மட்டும் அழைத்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க வரிந்து கட்டிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடுத்தனர். வழக்கில், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது. இன்று காலை 10 45 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்து உள்ளார்.

மே 15, 16 தேதிகளில் ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடித நகல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது அதன்படி தாக்கல் செய்யப்பட்டது.

மே 15 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.

மே 16 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிடுகின்றனர்.

காங்கிரஸ், மஜத  பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில் பாரதீய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன், என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 104 இடங்கள் வென்ற எடியூரப்பா எதன் அடிப்படையில் ஆளுனரால் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு  எடுக்க யாரை முதலில் அழைப்பது என்பதுதான் கேள்வி.

கர்நாடக சட்டசபையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  உத்தரவிடலாம். எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
1 More update

Next Story