‘‘நான் கல்கி அவதாரம்; பணிக்கு வர மாட்டேன்’’ அரசு அதிகாரி பிடிவாதம்


‘‘நான் கல்கி அவதாரம்; பணிக்கு வர மாட்டேன்’’ அரசு அதிகாரி பிடிவாதம்
x
தினத்தந்தி 18 May 2018 10:05 PM GMT (Updated: 18 May 2018 10:05 PM GMT)

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர பேபர். இவர், சர்தார் சரோவர் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளை கவனிக்க நியமிக்கப்பட்ட அரசு அமைப்பில் மேற்பார்வை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

ஆமதாபாத்,

ரமேஷ் சந்திர பேபர் கடந்த 8 மாதங்களில், வெறும் 16 நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளார். அதனால், அரசுப்பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி, அவரிடம் விளக்கம் கேட்டு அரசு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு ரமேஷ் சந்திர பேபர் அனுப்பிய பதில், சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகியுள்ளது. அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:–

நான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம். இதை விரைவில் நிரூபிப்பேன். 2010–ம் ஆண்டு மார்ச் மாதம், என் அலுவலகத்தில் இருந்தபோதே இதை உணர்ந்து கொண்டேன். அப்போதிருந்து எனக்கு தெய்வசக்தி இருக்கிறது.

நான் உலகத்தின் மனசாட்சியை மாற்றுவதற்காக, வீட்டில் தவம் இருந்து வருகிறேன். அலுவலகத்தில் தவம் இருக்க முடியாது என்பதால்தான், நான் அங்கு செல்வது இல்லை. எனது தவத்தால்தான், கடந்த 19 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது.

எனவே, நான் அலுவலகத்தில் அமர்ந்து நேரத்தை போக்க வேண்டுமா? அல்லது வறட்சியில் இருந்து நாட்டை காப்பாற்ற பாடுபட வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி அளித்த பதில், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.


Next Story