நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா?

போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக சபாநாயகர் போபையா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.
சபை கூடியதும், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுப்பதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தனர். இன்று சட்டசபைக்கு வந்து பதவி ஏற்று கொண்டனர். இது வரை 193 எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்று கொண்டனர். பின்னர் சட்டசபை 3.30 மணிக்கு சட்டசபை தள்ளிவைக்கப்பட்டது.போதுமான பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்கவில்லை எனகூறப்படுகிறது.
இந்த நிலையில் போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா? செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது உறுதிபடுத்தப்படவில்லை. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக கன்னட ஊடகங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
பாஜக தலைவர்களுடன் பெங்களூரில் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தாம் தோல்வி அடையலாம் என்றும் எடியூரப்பா அச்சம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியல் குறித்து டெல்லி பாஜக தலைவர்களுடன் எடியூரப்பா பேசி வருகிறார்.
Related Tags :
Next Story