கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா!


கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா!
x
தினத்தந்தி 20 May 2018 11:36 AM GMT (Updated: 20 May 2018 11:36 AM GMT)

தெலுங்கானாவில் 2019 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜூன் மாதம் பயணம் மேற்கொள்கிறார். #BJP #Telangana

புதுடெல்லி,

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வரும் பா.ஜனதாவிற்கு கர்நாடகம் நுழைவு வாயிலாக அமையும் என அக்கட்சியினர் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு பெருமளவு எதிர்ப்பு இல்லையென்றாலும் கடைசியில் அக்கட்சி எடுத்த முடிவால் பின்னடவை சந்தித்தது. அதேவேளையில் ஓட்டு வங்கியை தக்கவைத்தது. பா.ஜனதா எப்போதும் போல தீவிரம் காட்டி 104 தொகுதிகளில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. இருப்பினும் ஆட்சியமைக்க பலம் கிடைக்கவில்லை.

 காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அங்கு அமைய உள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்பு முதல் ராஜினாமா வரையில் பல்வேறு பரபரப்பு அதிரடிகள் அங்கு காணப்பட்டது. கடைசி நேரத்தில் போராட்டத்தில் பா.ஜனதா பின்வாங்கிவிட்டது.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் அடுத்த டார்க்கெட்டாக தெலுங்கானா மாநிலம் அமைந்து உள்ளது. தெலுங்கானாவில் 2019 தேர்தலை எதிர்க்கொள்ள பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜூன் மாதம் பயணம் மேற்கொள்கிறார். தெலுங்கானாவில் 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெறுகிறது. தெலுங்கானா பா.ஜனதா தலைவர் கே லட்சுமணன் பேசுகையில், “சமீபத்தில் டெல்லியில் பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அவர் தெலுங்கானாவில் கவனம் செலுத்துகிறார். தற்போது கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்டது, இனி தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் கவனம் செலுத்த வேண்டும் என தெளிவாக கூறிஉள்ளார்,” என கூறிஉள்ளார். 

தெலுங்கானாவில் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்யவும், தேர்தல் திட்டங்களை வகுக்கவும் அமித்ஷா அடுத்த மாதம் அங்கு பயணம் மேற்கொள்கிறார் என தெரிவித்து உள்ளார். 

தெலுங்கானாவில் பா.ஜனதா இயல்பாகவே வலுவாகதான் உள்ளது, இப்போது வாக்குச்சாவடி அளவில் கூடுதல் வலுவை ஏற்படுத்த வேண்டும். தெலுங்கானாவில் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகும் வகையில் கட்சியின் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் பாரதீய ஜனதா மிகப்பெரிய  சாதனைகளை தனதாக்கி வருகிறது, தெலுங்கானாவில் ரெயில்வே, இலவச கேஸ் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களில் மத்திய அரசு அதிகமான பங்களிப்பை கொடுத்து உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏழைகளுக்கு  வீடு வழங்குதல் மற்றும் தலித்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் ஆகிய திட்டங்களை நிறைவேற்றவே இல்லை என கூறிஉள்ளார் லட்சுமணன்.

தெலுங்கானா தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அதற்கு ஏற்றவகையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிகளில் கட்சி பணியை செய்யும் பொறுப்பு கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் பீகார் மந்திரி மங்கள் பாண்டேவிற்கு வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல்கள் நடைபெறும் போது கட்சியின் மத்திய தலைமை, கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவனம் செலுத்தும், பா.ஜனதா முதல்-மந்திரிகள் தேர்தல் பிரசாரம் செய்வார்கள் எனவும் கூறிஉள்ளார் லட்சுமணன்.

Next Story