காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2018 3:00 AM IST (Updated: 1 Sept 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான வழக்கை ஜனவரிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 35 ஏ-ன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்தும், சட்டப்பிரிவு 35 ஏ செல்லாது என அறிவிக்கக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளின் விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால், காஷ்மீர் மாநில அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணையின் போது அவர்கள், ‘காஷ்மீரில் 8 கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்தால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Next Story