மோடியின் துணிச்சலான நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரிப்பு: அமித்ஷா பெருமிதம்
மோடியின் துணிச்சலான நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சீனாவின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் அதை விட கூடுதலாகவே வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.33.74 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது ரூ.31.18 லட்சம் கோடியாகும். ஆக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது முதல் காலாண்டில் 8.2 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.இதற்கு முன்பாக கடந்த 2015-16 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் தான் நாட்டின் பொருளாதர வளர்ச்சியானதுஅதிகபட்ச அளவாக 9.3 சதவீதத்தைத் தொட்டிருந்தது. அதற்குப் பிறகு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தான் நாட்டின் பொருளாதாரத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story