சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முழுவதும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு: 5-ந்தேதி வழக்குகளை விசாரிக்கிறது
சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முழுவதும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு தொடர்பான வழக்குகளை 5-ந்தேதி விசாரிக்கிறது
புதுடெல்லி,
இந்தியாவின் தலைமை நீதிப்பீடமான சுப்ரீம் கோர்ட்டில் மிகவும் குறைவாகவே பெண் நீதிபதிகள் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த கோர்ட்டு அமைக்கப்பட்டு (1950) 39 ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1989-ல் தான் முதல் பெண் நீதிபதியான பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார்.
இறுதியாக கடந்த மாதம் பதவியேற்ற சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 8-வது பெண் நீதிபதி ஆவார். இந்த பெண் நீதிபதிகள் பெரும்பாலும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றி இருக்கின்றனர். இதனால் வழக்குகளை விசாரிக்க முற்றிலும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு அமைவது அரிது.
எனினும் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 2013-ம் ஆண்டு பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு ஒன்று அமைந்தது. அப்போது பணியில் இருந்த நீதிபதிகள் ஜியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய இருவரை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதன்பிறகு முற்றிலும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு அமையவில்லை.
இந்த நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இந்த அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. நீதிபதிகள் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெண் நீதிபதிகள் அமர்வு ஒன்று 5-ந்தேதி வழக்குகளை விசாரிக்கிறது. இவர்கள் இருவரையும் தவிர நீதிபதி இந்து மல்கோத்ராவும் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story