உங்கள் ஆட்சியில் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
2014-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு? என பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வியை எழுப்பியுள்ளார். #PMModi #PChidambaram
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கிச் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,
விண்ணைத்தொடும் அளவிலான வாராக்கடன்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என குற்றம் சாட்டினார்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் குறிப்பிட்ட குடும்பத்துக்கு (சோனியா காந்தி குடும்பத்துக்கு) நெருக்கமான பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டன. சுதந்திரம் அடைந்தது முதல் 2008–ம் ஆண்டு வரையில் ரூ.18 லட்சம் கோடி வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் விண்ணைத் தொடுகிற அளவுக்கு ரூ.52 லட்சம் கோடி வங்கிக்கடன்கள் தரப்பட்டு உள்ளன. பரம்பரை அரசியல்வாதிகள் (சோனியா காந்தி குடும்பத்தினர்) தொலைபேசியில் அழைத்துப் பேசியதின் அடிப்படையில் வங்கிகள் கடன்களை வழங்கினார்கள்.
வாங்குகிற கடன்களை திரும்ப செலுத்த மாட்டார்கள் என்று நன்றாக வங்கிகள் அறிந்தும்கூட, அந்த குடும்பத்தின் உத்தரவின்பேரில் குறிப்பிட்ட சிலருக்கு கடன்களை வழங்கின. கடன்களை அவர்கள் திருப்பிச் செலுத்தாதபோது, கடன்களை மறுசீரமைப்பு செய்யுமாறு வங்கிகளை அவர்கள் கட்டாயப்படுத்தினர். வாராக்கடன்களின் பின்னால் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மறைந்து கொண்டது.
கடந்த 4 ஆண்டுகளில், ரூ.50 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட அனைத்து கடன்களும் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றை வசூலிக்க கண்டிப்புடன் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மிகப்பெரிய அளவில், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி கடன்களை 12 பேர் மட்டுமே வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தவில்லை. இவர்களில் ஒருவருக்கு கூட எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் கடன் தரவில்லை. மேலும் 27 பேர் ரூ. 1 லட்சம் கோடியை வாங்கி விட்டு திரும்பச் செலுத்தவில்லை. இந்தக் கடன்களை திரும்பச் செலுத்த வைப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடன்களை திருப்பிச்செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் பேசினார் பிரதமர் மோடி.
இந்நிலையில் 2014-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் வங்கிகளின் வாராக்கடன் எவ்வளவு? என பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வியை எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வழங்கப்பட்ட கடன்கள்தான் வாராக்கடன்கள் ஆகி விட்டன என்று பிரதமர் மோடி கூறியது சரியானது என்றே கொள்வோம். ஆனால் அந்த கடன்களில் எத்தனை கடன்கள் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டன? 2014–ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் (மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர்) எத்தனை வங்கிக் கடன்கள் தரப்பட்டு உள்ளன? எவ்வளவு தொகை கடனாக தரப்பட்டது? அவற்றில் எத்தனை கடன்கள் வாராக்கடன்கள் ஆகி உள்ளன? பாராளுமன்றத்தில் இதுபற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் தரப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story