காஷ்மீரில் போலீசார் செய்யும் தியாகங்கள்; உருக்கமுடன் எழுதிய காவல் அதிகாரியின் மனைவி
காஷ்மீரில் பணியில் உள்ள போலீசார் செய்யும் தியாகங்களை பற்றி இணையதளத்தில் காவல் அதிகாரியின் மனைவி உருக்கமுடன் எழுதியுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பணியில் இருக்கும் போலீசார் செய்யும் தியாகங்கள், தீவிரவாதிகளால் அவர்களின் உறவினர்கள் இலக்காவது ஆகியவை பற்றி காவல் அதிகாரி ஒருவரின் மனைவியான ஆரிபா டாசிப் என்பவர் உள்ளூர் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ளார்.
அதில், காவல் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது குழந்தைகளை பெற்றோர் இருவரில் ஒருவரே இருப்பது போன்று தனியாக வளர்க்கின்றனர். கணவர்கள் பணியில் வேறிடத்தில் இருக்கின்றனர். அதனால் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என யாரும் இல்லை.
குடும்ப விழாக்கள் அல்லது துக்க விசயங்களில் ஒன்றாக செல்ல திட்டமிடுகிறோம். குழந்தைகளை தனி ஆளாக வளர்ப்பவர்கள் என்பதுடன் நாங்கள் பெரிய பொய்யர்களாகவும் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
எங்களது குழந்தைகளிடம் இந்த சனி கிழமை தந்தை வந்து விடுவார் என பொய் கூறுகிறோம். இந்த முறை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு தந்தை வந்து விடுவார், இந்த வாரம் பிக்னிக்கிற்கு ஒன்றாக போகிறோம் என பொய் கூறுகிறோம். இந்த ஈத் பண்டிகைக்கு அல்லது அந்த திருமணத்திற்கு அவர் (தந்தை) நம்முடன் வருவார் என நாங்கள் பொய் கூறுகிறோம்.
எங்கள் கணவரின் பெற்றோரிடமும் இன்று அல்லது நாளை அவர் வந்து விடுவார் என பொய் கூறுகிறோம். எங்களுக்கே நாங்கள் பொய் கூறி கொள்கிறோம் என அதில் எழுதியுள்ளார்.
தனியாக தூங்குவது அதிக வருத்தம் தருவதில்லை. ஆனால் நள்ளிரவில் எழுந்து விட்டால் அதன்பின் தூங்குவது அசவுகரியம் தருகிறது.
காத்திருக்கிறோம், காத்திருக்கிறோம்… காத்திருப்பது மட்டும் செய்கிறோம். ஒருவேளை அவர் எங்களுடன் இருக்கும் வாய்ப்பு அமைந்து விட்டால் மனதளவில் பணியை பற்றிய நினைவே அவரிடம் இருக்கும் என்றும் அதில் எழுதியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் உள்ளூர்வாசிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்படுவதும் வருத்தம் அளிக்கிறது.
காவல் அதிகாரிகளுக்கு எதுவும் நேர்ந்து விட்டால் ஒரு சிலரே எங்களுக்கு இரக்கப்படுவோராக இருக்கின்றனர். இவை அனைத்தும் எங்கள் குழந்தைகளுக்கு மிக சிறிய வயதிலேயே புரிந்து விடுகிறது. இந்த இருள் சூழ்ந்த மேகங்களில் இருந்து எங்களது மாநிலம் வெளிவந்து, அமைதியான மற்றும் வளமிக்க காஷ்மீருக்கான விடியலை நாங்கள் காணுவோம் என நான் விரும்புகிறேன் என்று அவர் அதில் எழுதி முடித்துள்ளார்.