ரபேல் ஒப்பந்தம்: பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.
இதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ரபேல் போர்விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளது.
அரசியல் சாசனத்தின் 253–வது பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி, முன்னாள் ராணுவ மந்திரியும், தற்போதைய கோவா முதல்–மந்திரியுமான மனோகர் பாரிக்கர், தொழில் அதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் தசால்த் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் ஊழல் பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பரிசீலனைக்கு வந்த போது, நீதிபதிகள் இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டனர்.
Related Tags :
Next Story