அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 Sep 2018 9:23 AM GMT (Updated: 16 Sep 2018 9:23 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நில சரிவில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இட்டாநகர்,

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதில் மோடிரிஜோ, டோன்யி போலோ பகுதி, சந்திரா நகர், லோபி, ஜி.எஸ்.எஸ். போலீஸ் காலனி, பிரெஸ் காலனி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் 26 வீடுகள் அடித்து செல்லப்பட்டு உள்ளன.

இதனுடன் 60 வீடுகள் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியாகவோ சேதமடைந்து உள்ளன.  சில பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், கால்வாயின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் மோடிரிஜோ பகுதியில் 32 வயது நிறைந்த மேரி பியோங் என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  எனினும் 10 வயது சிறுமி பங்பி பியோங் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  சிறுமியை கண்டறிய மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இடாநகர் எம்.எல்.ஏ. டெகி கசோ வழங்கினார்.

இதேபோன்று காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.  உடல்நல பரிசோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.  அவசர மருத்துவ சிகிச்சைக்காக மொபைல் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.


Next Story