9 சதவீதம் மலிவு விலையில் ‘ரபேல்’ போர் விமானங்கள் கொள்முதல் : நிர்மலா சீதாராமன் பேட்டி


9 சதவீதம் மலிவு விலையில் ‘ரபேல்’ போர் விமானங்கள் கொள்முதல் : நிர்மலா சீதாராமன் பேட்டி
x
தினத்தந்தி 18 Sep 2018 11:30 PM GMT (Updated: 2018-09-19T02:25:41+05:30)

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை விட 9 சதவீதம் மலிவு விலையில்தான் ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘உங்கள் (காங்கிரஸ் கூட்டணி அரசு) அடிப்படை விலை மற்றும் பிற அனைத்து அம்சங்களுடன் ஒப்பிடுகிறபோது, 9 சதவீதம் மலிவு விலையில்தான் நாங்கள் ரபேல் போர் விமானங்களை வாங்குகிறோம்’’ என்று கூறினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ராணுவ மந்திரி பதவி வகித்த ஏ.கே. அந்தோணி பேட்டி அளித்தபோது, ‘‘எங்கள் ஆட்சியில் பேசப்பட்டதை விட குறைவான விலையில்தான் ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன என்று சொன்னால், ஏன் இந்த அரசு 126 விமானங்களுக்கும் கூடுதலாக வாங்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.

அது மட்டுமின்றி, ‘‘சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் சமீபத்தில் கூறுகையில் ரபேல் போர் விமானம் தொடர்பான புதிய ஒப்பந்தம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பேசப்பட்டதைவிட 9 சதவீதம் குறைவான விலையில் வாங்கப்படுகின்றன என்றார். ஆனால் நிதி மந்திரி அருண் ஜெட்லியோ 20 சதவீதம் மலிவு விலையில் வாங்கப்படுகின்றன என்று கூறி இருக்கிறார். இந்திய விமானப்படை அதிகாரியோ 40 சதவீதம் மலிவு விலையில் வாங்கப்படுகின்றன என்கிறார். அப்படி மலிவான விலையில் வாங்கப்படுகின்றன என்கிறபோது எதற்காக 126 விமானங்களுக்கு கூடுதலாக வாங்க வில்லை?’’ என்றும் ஏ.கே. அந்தோணி கேட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து சென்றபோது, அந்த நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வாவுடன் கட்டித் தழுவியதால் எழுந்து உள்ள சர்ச்சை பற்றி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘‘சித்துவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட அவர் அங்கே செல்கிறார், ராணுவ தளபதியுடன் கட்டித்தழுவுகிறார் என்கிறபோது, நமது வீரர்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும், இது மக்களையும் சோர்வுக்கு ஆளாக்கும். சித்து அதைத் தவிர்த்து இருக்க வேண்டும் என்பதே என் கருத்து’’ என பதில் அளித்தார்.


Next Story