மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் ‘காலை உடைத்து விடுவேன்’ என மிரட்டிய மத்திய அமைச்சர்


மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சியில் ‘காலை உடைத்து விடுவேன்’ என மிரட்டிய மத்திய அமைச்சர்
x
தினத்தந்தி 19 Sep 2018 7:05 AM GMT (Updated: 19 Sep 2018 7:05 AM GMT)

காலை உடைத்து விடுவேன் என மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Babul Supriyo

அசன்சோல், 

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனிடையே நிகழ்ச்சியில் அமைச்சர் பேசி கொண்டிருக்கையில் ஒருவர் அங்குமிங்கும் நடந்து கொண்டு இருந்தார். இதனால் கவனம் சிதறப்பட்ட சுப்ரியோ, ஏன் நடந்து கொண்டே இருக்கிறீர்கள்? தயவு செய்து உட்காருங்கள் எனக் கூறினார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நபர் குறுக்கே நடந்து செல்ல, கோபமுற்ற அமைச்சர் நிதானத்தை இழந்து என்ன ஆயிற்று உங்களுக்கு, ஏதாவது பிரச்சனையா? உங்களின் ஒரு காலை உடைத்து, ஊன்று கோலை என்னால் தர முடியும் எனக் கூறினார். மேலும் தன்னுடைய பாதுகாவலர்களிடம் அந்த நபர் இனி நகர்ந்தால் அவரின் காலை உடைத்து, ஊன்று கோலை கொடுங்கள் எனக் கூறினார்.

பின்னர் பேசிய பாபுல், பார்வையாளர்களிடம் அந்த மனிதருக்காக கை தட்டுகள் என்றும் கூறினார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளதால் சர்ச்சையில் சுப்ரியோ சிக்கியுள்ளார்.

Next Story