உத்தர பிரதேசத்தில் ஆணவ கொலை; அரசு ஊழியரின் உடல் வன பகுதியில் கண்டெடுப்பு


உத்தர பிரதேசத்தில் ஆணவ கொலை; அரசு ஊழியரின் உடல் வன பகுதியில் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 Sep 2018 12:24 PM GMT (Updated: 2018-09-20T17:54:55+05:30)

உத்தர பிரதேசத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட அரசு ஊழியர் ஒருவரின் உடல் வன பகுதியில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் வசித்து வந்தவர் மனோஜ் சர்மா (வயது 26).  இவரது மனைவி சோனியா.  இவர்கள் இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.  அவர்கள் தங்களது குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  மனோஜ் தணிக்கை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி உறவினரின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.  அதன்பின் அவர் காணாமல் போயுள்ளார்.  இதுபற்றி மனோஜின் மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  இதில் சோனியாவின் சகோதரர்கள் 2 பேர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முசாபர்நகரின் குத்பா கிராமத்தில் வன பகுதியில் இருந்து மனோஜின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் சமீபத்தில் பிரனாய் என்பவர் வேறு சாதி பெண்ணான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் தந்தையால் கூலிப்படையை சேர்ந்த நபரை கொண்டு கொலை செய்யப்பட்டார்.

இதேபோன்று நேற்று தெலுங்கானாவில் மற்றொரு சம்பவத்தில் சந்தீப் என்பவர் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் தந்தையால் அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டனர்.  இதில் தம்பதியினர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story