’குஜராத் கலவரத்தின் போது மோடி அமைதியாக இருந்தார்’- அசாமில் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதால் சர்ச்சை


’குஜராத் கலவரத்தின் போது மோடி அமைதியாக இருந்தார்’- அசாமில் 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதால் சர்ச்சை
x
தினத்தந்தி 21 Sep 2018 8:47 AM GMT (Updated: 21 Sep 2018 8:47 AM GMT)

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் குஜராத் கலவரத்தின் போது மோடி அமைதியாக இருந்தார் என்ற தகவல் இடம் பெற்றுள்ளதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AssamClass12

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் குஜராத் கலவரம் குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. பொலிட்டிக்கல் சைன்ஸ் புத்தக்கத்தில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் ’அமைதி’ என்றும், 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் அப்போதைய மாநில முதல்வராக இருந்த மோடி அமைதியாக இருந்தார் என்ற தகவலும் இடம் பெற்றிருந்தது. 

 கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புத்தகத்தை தற்போது கண்டித்து செளமித்ரா கோஷ்வாமி மற்றும் மானவ் யோதி போரா ஆகிய இருவரும் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,  புத்தகத்தின் 376 வது பக்கத்தில் குஜராத்தின் கோத்ரா ரெயில் நிலையத்தில் சபர்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் எரிக்கப்பட்டு 57 பேர் உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. அச்சமயத்தில் மாநிலத்தில் பல வன்முறைகள் நடைபெற்ற போது முதல்வராக இருந்த மோடி அமைதியாக இருந்தார் என்றும், மாநில அரசாங்கம் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும் இந்துகளுக்கு உதவி செய்தது என்ற தகவலும் இடம் பெற்றுள்ளதாக கூறினர்.

துர்கா காந்த ஷர்மா, ரஃபீக் ஜமான் மற்றும் மனாஷ் ப்ரோதீம் பரூவா ஆகிய மூன்று ஆசிரியர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டே இந்த புத்தகம் வெளிவந்த நிலையில், தற்போது இந்த புத்தகத்தின் சர்குலேசனை தடை செய்ய வேண்டும் என புகார் அளித்த இருவரும் கூறியுள்ளனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் அசாம் மாநிலம் கோலாக்கட் சதார் காவல் நிலையத்தில் புத்தகம் எழுதிய ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துர்கா காந்த ஷர்மா சில வருடங்களுக்கு முன்னால் இறந்த விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த புகாரை முற்றிலும் மறுத்துள்ள ஆசிரியர்கள், பிரதமருக்கு எதிராக எதுவும் புத்தகத்தில் இடம் பெறவில்லை எனக் கூறியுள்ளனர். இது குறித்து  மனாஷ் ப்ரோதீம் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், புத்தகமானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னால் என்.சி.ஆர்.டி எனப்படும் தேசிய கவுன்சில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பாடப்புத்தகத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டது. பொது மக்களிடையே களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக நாங்கள் எதுவும் எழுதவில்லை.  என்.சி.ஆர்.டி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் சில புத்தகங்களும் குஜராத் கலவரத்தை உள்ளடக்கி எழுதியுள்ளன எனக் கூறினார்.

Next Story