ஐ.நா. சபை பொதுசெயலாளர் அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகை தரவிருக்கிறார்


ஐ.நா. சபை பொதுசெயலாளர் அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகை தரவிருக்கிறார்
x
தினத்தந்தி 22 Sep 2018 8:04 AM GMT (Updated: 22 Sep 2018 8:04 AM GMT)

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார். #Antonio Guterres

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி இந்தியா வரவிருக்கிறார். 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கும் ஐ.நா. சபை பொதுசெயலாளர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளானது 2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், வரும் அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் அதற்கான தொடக்க விழாவில் ஆன்டனியோ கலந்து கொள்கிறார். மேலும் அக்டோபர் 1-ஆம் தேதி புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐ.நா. அலுவலகத்தை ஆன்டனியோ திறந்து வைக்கிறார். பின்னர் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்திக்கும் ஆன்டனியோ, இந்திய வாழ்வாதார மையம் சார்பில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்கிறார். பின்னர் அன்று மாலை சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் சந்திப்பில் பங்கேற்கிறார்.

பின்னர் அக்டோபர் 3-ஆம் தேதி  பொதுசெயலாளர் ஆன்டனியோ குட்டெரஸ் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மேலும் அமிர்தரசிலுள்ள பொற்கோவிலையும் ஆன்டனியோ குட்டெரஸ் பார்வையிடுகிறார். இதையடுத்து ஆன்டனியோ அக்டோபர் 4-ஆம் தேதி நியூயார்க் திரும்புவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Next Story