பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை ஏற்கிறேன்; பிபின் ராவத்


பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை ஏற்கிறேன்; பிபின் ராவத்
x
தினத்தந்தி 23 Sep 2018 1:56 PM GMT (Updated: 2018-09-23T19:26:09+05:30)

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை ஏற்கிறேன் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷியும் அடுத்த வாரம் நியூயார்க் நகரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரையொட்டி இந்த சந்திப்பு நிகழ்வதாக இருந்தது. 

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான மறுதினமே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் 3 போலீசாரை கடத்திச்சென்று சுட்டுக்கொன்றனர். இதனால் இந்திய அரசு உடனடியாக நியூயார்க் நகரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்படவேண்டும் என்ற எனது கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்து இருப்பது, அதன் ஆணவப்போக்கையே காட்டுகிறது. இந்தியாவின் எதிர்மறையான இந்த பதில் பாகிஸ்தானுக்கு அதிருப்தியும் அளிக்கிறது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசும்பொழுது, இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்க முடியாது.  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் தீவிரவாதிகளை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

அரசின் கொள்கை தெளிவாக உள்ளது.  நீங்கள் (பாகிஸ்தான்) சில தொடக்க முயற்சிகளை வெளிப்படுத்திய நிலையில், தீவிரவாதத்தினை நீங்கள் ஊக்குவிக்கவில்லை என நாங்கள் உணர்ந்தோம்.  ஆனால் தீவிரவாத செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  எல்லையின் அந்த பகுதியில் இருந்து தீவிரவாதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், பேச்சுவார்த்தை பற்றி அரசே முடிவு செய்ய முடியும்.  அமைதிக்கான பேச்சுவார்த்தை மற்றும் தீவிரவாதம் ஆகிய இரண்டும் ஒன்றாக நடைபெற முடியாது என்ற அரசின் முடிவை நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பினை நாங்கள் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

Next Story