கற்பழிப்பு புகார் : கன்னியாஸ்திரி மடத்துக்கு அழைத்து சென்று பேராயரிடம் விசாரணை

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கன்னியர் மடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
கோட்டயம்,
இந்த விவகாரத்தை விசாரணை நடத்தி வரும் வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுப்படையினர், பேராயர் மூலக்கல்லை கடந்த 19–ந் தேதி விசாரணைக்கு அழைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் 21–ந் தேதி இரவில் அவரை கைது செய்தனர்.
பின்னர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர்.இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவருக்கு 2 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டார். உடனே அவரை காவலில் எடுத்த போலீசார், கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று அவர் குருவிலங்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள கன்னியாஸ்திரி மடத்துக்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு கற்பழிப்பு சம்பவம் அரங்கேறியதாக கூறப்படும் விருந்தினர் மாளிகைக்கு பேராயரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அந்த கன்னியாஸ்திரி மடத்தில் காலை 10.20 மணி முதல் 11.10 மணி வரை இந்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியோ, பிற அருட்கன்னியர்களோ யாரும் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை முடிந்த பின் மீண்டும் அவர் போலீஸ் கிளப்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) மதியத்துடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவர் கற்பழிப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருவதால், அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுச்செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே பேராயர் பிராங்கோவை கைது செய்யக்கோரி கொச்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற வயநாட்டை சேர்ந்த லூசி கலாபுரா என்ற கன்னியாஸ்திரி, நேற்று தனது மடத்துக்கு திரும்பினார். அவரை, திருச்சபை பணிகளில் ஈடுபடக்கூடாது என மடத்தின் தலைமை கன்னியாஸ்திரி அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக தன்னிடம் எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் தரவில்லை எனவும், வாய்மொழி உத்தரவு மட்டுமே போடப்பட்டு இருப்பதாகவும் லூசி கலாபுரா கூறியுள்ளார்.