10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு : பிரதமர் தொடங்கி வைத்தார்


10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு : பிரதமர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Sep 2018 12:00 AM GMT (Updated: 23 Sep 2018 10:13 PM GMT)

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பலன் பெறலாம்.

ராஞ்சி,

நாட்டின் 72–வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியேற்றி உரை ஆற்றினார்.

அன்று அவர் அறிவித்த மகத்தான திட்டம்தான், ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.

இதுபற்றி அவர் பேசுகையில், ‘‘உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறோம். இதன் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடையும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்போகிறோம். இதன் மூலம் 50 கோடி பேர் மருத்துவ காப்பீட்டு பலன் பெற முடியும்’’ என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்வடிவம் பெற்று உள்ளது.

இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்குள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த விழாவில் பயனாளிகள் சிலருக்கு அவர் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுகாதார அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம், அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிற உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம் என்ற சிறப்பை பெறுகிறது.

நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கிய திட்டம் இந்த திட்டம். இன்று முதல் (நேற்று முதல்) இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு சமமான எண்ணிக்கையிலான இந்திய மக்கள், இந்த காப்பீட்டு திட்டத்தினால் பலன் பெறுவார்கள்.

முந்தைய அரசுகள் (காங்கிரஸ் அரசுகள்) ஏழை எளியோருக்கு அதிகாரத்தை வழங்காமல், ஓட்டு வங்கி அரசியல் நடத்தின. ஆனால் பாரதீய ஜனதா கூட்டணி அரசுதான், ஏழை எளியோருக்கு அதிகாரம் வழங்குவதில் கவனத்தை செலுத்துகிற அரசாக திகழ்கிறது.

இந்த திட்டத்தின்கீழ் இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் நீரிழிவு உள்பட 1,300 நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும்.

மக்கள் இந்த திட்டத்தை மோடி கேர் என்பது உள்பட பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இதை ஏழைகளுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறேன். சமூகத்தின் மிக அடிமட்ட பிரிவில் வாழ்கிற ஒருவர் கூட இந்த திட்டத்தினால் பலன் அடைய முடியும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உழைத்த அதிகாரிகள், இந்த திட்டத்தினால் பலன் அடையப்போகிற 50 கோடி மக்களின் ஆசியையும் பெறுவார்கள்.

ஏழை எளிய மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்கிற நிலை வராது, வரக்கூடாது என்பதே என் நம்பிக்கை; என் பிரார்த்தனை. ஒருவேளை அவர்கள் சென்றால் இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சேவையைப் பெற முடியும். பணக்காரர்கள் அனுபவிக்கிற அனைத்து வசதிகளையும், நாட்டின் ஏழை எளியோர் அனைவரும் பெற வேண்டும்.

அனைவருக்காகவும் ஒன்று சேருவோம். அனைவரும் முன்னேற்றம் அடைவோம்.

இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டமானது, எந்த ஒரு வகுப்பு வாத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ உருவான திட்டம் அல்ல.

இந்த திட்டம் மக்களை மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ, இருப்பிட அடிப்படையிலோ வேறுபடுத்தாது. தகுதி வாய்ந்த ஒவ்வொருவரும் இந்த திட்டத்தின் பலன்களை அடைய முடியும். உலகமெங்கும் உள்ள நாடுகளுக்கு இந்த திட்டம் ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்கும்.

இந்த திட்டத்துக்காக யாரும் முன்முயற்சியுடன் பதிவு செய்து கொள்ளத்தேவையில்லை. இந்த திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்காக ஒரு சுகாதார அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு கட்டணம் இல்லா தொலைபேசி சேவை ஏற்படுத்தப்படும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவு நகரங்களில் 2 ஆயிரத்து 500 நவீன ஆஸ்பத்திரிகள் தொடங்கப்படும். அவற்றின் மூலம் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் ஆஸ்பத்திரிகள் கொண்டு வரப்படுகின்றன.

மலிவான மருத்துவ சிகிச்சை வழங்கவும், நோய்களை தடுக்கவும் எங்கள் அரசு முனைப்போடு ஒரு முழுமையான அணுகுமுறையை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் மாநில அரசு சார்பில் இலவச காப்பீட்டு திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் தமிழகமும் சேருகிறது.

எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை எளியோர் இந்த திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story