இமாச்சலபிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: கல்வி நிலையங்கள் மூடல்


இமாச்சலபிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: கல்வி நிலையங்கள் மூடல்
x
தினத்தந்தி 24 Sep 2018 2:34 AM GMT (Updated: 24 Sep 2018 2:34 AM GMT)

இமாச்சலபிரதேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழையால் இன்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #HimachalRain

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மாநிலத்தையே மிரட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் மழைநீரில் தத்தளிக்கின்றன. பல சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கின்றன. மாண்டி மாவட்டத்தின் பீயஷ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. தொடந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக குல்லு, கின்னார், சம்பா, காங்ரா, பிலாஷ்பூர், மாண்டி, சிம்லா உட்பட பல மாவட்டங்களில் இயங்கி வரும் கல்வி நிலையங்கள் இன்றும் மூடப்பட்டுள்ளன. குல்லு மாவட்ட துணை ஆணையாளர் யூனுஷ் கான் கூறுக்கையில், கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு அருகில் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் கூறினார். இதனிடையே மனாலி அருகே சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளநீரில் சுற்றுலா பஸ் ஒன்று அடித்து செல்லப்பட்டதாகவும், பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லை என்றும் ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளநீரில் சிக்கிய டோபி-ஃபோஜால் பகுதி மக்கள் 19 பேரை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Next Story