கொள்ளையை தடுத்ததற்கு டி சர்ட் பரிசு; ஆத்திரத்தில் ரூ.70 லட்சம் பணத்துடன் தப்பி சென்ற வேலையாள்


கொள்ளையை தடுத்ததற்கு டி சர்ட் பரிசு; ஆத்திரத்தில் ரூ.70 லட்சம் பணத்துடன் தப்பி சென்ற வேலையாள்
x

கொள்ளையை தடுத்ததற்கு முதலாளி டி சர்ட் பரிசளித்த ஆத்திரத்தில் ரூ.70 லட்சம் பணத்துடன் வேலையாள் ஒருவர் தப்பி சென்றார்.

புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் பைனான்சியர் ஒருவரிடம் வேலை செய்து வந்தவர் தன்சிங் பிஸ்த்.  முதலாளி கூறும் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு அதனை வங்கியில் செலுத்துவது இவரது பணி.

ஒருமுறை இவர் ரூ.80 லட்சம் கொண்ட தனது முதலாளியின் பணப்பையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபொழுது கொள்ளையர்கள் இவரை தடுத்துள்ளனர்.  இதனால் கொள்ளையர்களிடம் இருந்து பணப்பையை காப்பதற்காக கடுமையாக சண்டை போட்டுள்ளார்.  இதில் இவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

கொள்ளையர்களிடம் இருந்து பணப்பையை காத்து கொடுத்ததற்காக முதலாளி தனக்கு பெரிய பரிசு தருவார் என தன்சிங் நினைத்து உள்ளார்.  ஆனால் அதற்கு பதிலாக டி சர்ட் பரிசாக கிடைத்து உள்ளது.

இதனால் தன்சிங் அதிக வருத்தம் அடைந்து உள்ளார்.  தன்சிங்கிற்கு 3 மகள்கள்.  அவர்களை திருமணம் முடித்து வைக்க பணம் தேவைப்பட்டு உள்ளது.  ஆனால் கொள்ளையர்களிடம் சண்டை போட்டு காயம் அடைந்த நிலையில் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

இதன்பின் தனது நண்பர் யாகூபிடம் இதுபற்றி கூறிய தன்சிங் தனது திட்டத்தினை செயல்படுத்த தொடங்கினார்.  அதன்படி கடந்த ஆகஸ்டு 28ந்தேதி முதலாளி கூறிய வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.70 லட்சம் பணம் பெற்று கொண்டு யாகூபை தொடர்பு கொண்டுள்ளார்.

தனது மோட்டார் சைக்கிளை யாகூபின் கடை முன் நிறுத்தினார்.  அதன்பின் யாகூபின் காரில் நைனிடாலுக்கு இருவரும் தப்பினர்.  யாகூபிற்கு ரூ.3 லட்சம் பணம் தரப்பட்டுள்ளது.  இதனை அடுத்து அங்கு தன்சிங்கை இறக்கி விட்டு விட்டு திரும்பி வந்து மோட்டார் சைக்கிளை யாகூப் விற்றார்.  ஆனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைனான்சியரின் ரூ.70 லட்சம் பணத்துடன் தன்சிங் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.


Next Story