புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது


புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
x
தினத்தந்தி 26 Sep 2018 9:36 AM GMT (Updated: 26 Sep 2018 9:36 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,
 
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஜனாதிபதி கடந்த 3–ந் தேதி, நீதிபதி ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்தார்.

ரஞ்சன் கோகாய், வருகிற 3–ந் தேதி பதவி ஏற்கிறார். இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சத்யவீர் சர்மா மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில் அவர் கூறி இருப்பதாவது:– கடந்த ஜனவரி 12–ந் தேதி, நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் நீதிபதி ரஞ்சன் கோகாயும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும், மேற்கண்ட 4 பேரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டனர். அவர்களின் செயல், நாட்டின் நீதிபரிபாலனத்தை சீர்குலைக்கும் முயற்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலவிய உட்பூசல்கள் குறித்து பொதுமக்களின் கோபத்தை தட்டி எழுப்ப முயன்றனர்.

இதில் ஈடுபட்ட நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல், சட்ட விரோதமானது, சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரானது. அவரை கண்டிப்பதற்கு பதிலாக, மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளனர்.

அவர்களின் செயல், சட்ட விரோதமானது. ஏனென்றால், தவறான நீதித்துறை நடத்தை கொண்டவருக்கு நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை அளித்துள்ளனர். ஆகவே, அவரது நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்தது 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரரின் வக்கீல் லுத்ரா நேற்று ஆஜராகி, இந்த மனுவை பற்றி குறிப்பிட்டார். இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, இம்மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. இன்று விசாரணையின் போது மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. “நாங்கள் தலையிடுவதற்கான நிலையில் இல்லை என்று கருதுகிறோம்,” என்று கூறியது. மனு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையென்று கூறி தள்ளுபடி செய்தது.

Next Story