தெலுங்கானாவுக்கு வளர்ச்சி தெலுங்கு தேச கட்சியாலேயே சாத்தியம்; எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா


தெலுங்கானாவுக்கு வளர்ச்சி தெலுங்கு தேச கட்சியாலேயே சாத்தியம்; எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா
x
தினத்தந்தி 1 Oct 2018 2:22 PM IST (Updated: 1 Oct 2018 2:22 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தினை இன்று தொடங்கினார்.

கம்மம்,

தெலுங்கானாவில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசாரத்திற்காக கட்சிகள் தயாராகி வருகின்றன.  தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா கம்மம் மாவட்டத்தில் மதீரா நகரில் இன்று தேர்தல் பிரசாரத்தினை தொடங்கினார்.

இதற்காக வந்த அவரை அக்கட்சியின் தெலுங்கானா தலைவர் எல். ரமணா தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர்.  இதனையொட்டி சைக்கிள் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது.

அதன்பின் தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் என்.டி. ராமராவ் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு மதீராவில் அவர் பேசினார்.  அவர் பேசும்பொழுது, முன்னாள் முதல் மந்திரி ராமராவ் நாட்டில் தெலுங்கு மக்களுக்கு ஓர் அடையாளத்தினை கொண்டு வந்தவர்.  அவர் தனது இறுதி மூச்சு வரை மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்.

ராமராவ் மற்றும் ஆந்திர பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெலுங்கானா வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபட்டனர்.  தெலுங்கு தேச கட்சியாலேயே தெலுங்கானாவுக்கு வளர்ச்சி என்பது சாத்தியப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story