நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில்


நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில்
x
தினத்தந்தி 16 Oct 2018 3:30 PM GMT (Updated: 16 Oct 2018 3:30 PM GMT)

நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார்.



புதுடெல்லி, 

 
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து,  இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வெளிநாட்டுக்கு தப்பி விட்ட மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்ததாக குற்றம்சாட்டி உள்ளார். இதேபோன்று மல்லையாவும் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் தப்பியுள்ளார் என குற்றம் சாட்டினார். 

இதற்கு பேஸ்புக்கில் பதிலளித்துள்ள அருண் ஜெட்லி, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசுகையில், விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி என்னை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உதவினேன் என்பதை ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். இதில் உண்மை என்னவென்றால், என் வாழ்வில் நிரவ் மோடியை நான் பார்த்ததாகவே நினைவில் இல்லை. அப்படி இருக்கையில், நாடாளுமன்றத்தில் நான் அவரை சந்தித்தேனா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

ராகுல்காந்தி கூறியபடி அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தால், அதை அங்குள்ள வரவேற்பு ஆவணங்கள் காட்டுமே. பின் நான் எங்கே ஒப்புக்கொண்டேன், ராகுல் காந்தி அவர்களே? என கேள்வியை எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விஜய் மல்லையா ஒரு முறை நாடாளுமன்ற தாழ்வாரத்தில் என்னை துரத்தி வந்து பேசினார். நான் அவர் பேசியதை காது கொடுத்து கேட்கவில்லை. உங்கள் திட்டத்தை நீங்கள் வங்கிகளிடம் போய் பேசுங்கள் என்று கூறி விட்டேன்.இதைத்தான் அவர் நான் மல்லையாவை சந்தித்ததாகவும், அவர் லண்டனுக்கு தப்பப்போவதாக கூறியதாகவும், நான் உதவியதாகவும் கூறி உள்ளார். இது முழுக்க முழுக்க பொய். இப்படிப்பட்ட பொய்யை அவர் எப்படி கற்பனை செய்கிறார்? என கேள்வியை எழுப்பியுள்ளார் அருண் ஜெட்லி.

Next Story