கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தல்


கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்: ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2018 6:23 AM GMT (Updated: 17 Oct 2018 6:23 AM GMT)

கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவா, 

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59).
இந்த நிலையில் அவர் சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றார். அங்கு இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2–ந் தேதி சென்ற அவர், மாயம் ஆனார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.இதற்கிடையில் நேற்று சவூதி அரேபிய சென்ற அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ  சவுதி மன்னர் சல்மானை சந்தித்துப் பேசினார். பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

இதற்கு மத்தியில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி சவுதி அரேபியாவும், துருக்கியும் தெரிவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பசேலெட் வலியுறுத்தி உள்ளார். மேலும்,  பத்திரிகையாளர் மாயம் ஆனது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story