சபரிமலையில் பெண்களை பக்தர்கள் தடுத்ததால் மோதல், தடியடி காரணமாக பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்


சபரிமலையில் பெண்களை பக்தர்கள் தடுத்ததால் மோதல், தடியடி காரணமாக பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:24 PM GMT (Updated: 17 Oct 2018 3:24 PM GMT)

சபரிமலையில் பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன் மோதல் வெடித்தது, இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.



திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல் பகுதியில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோவிலுக்கு செல்லும் வாகனங்களை சோதனையிட்ட அவர்கள் பெண்களை கீழே இறக்கினர். 

செய்தி சேகரிக்க சென்ற  பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் போலீசார் பெண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாலை கோவில் திறக்கப்பட்டாலும் பெண்கள் யாரும் தரிசனத்திற்கு செல்லவில்லை. இதற்கிடையே போராட்டம் நடத்தியவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாலையும் நிலக்கல் பகுதியில் செய்தியாளர்கள் மற்றும் பிறரை ஏற்றிச்சென்ற பஸ்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பம்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வன்முறை சம்பங்களுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா உள்ளது என கேரளா அரசு குற்றம் சாட்டியுள்ளது.

144 தடை உத்தரவு

பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அங்கு 144–ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22–ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையை சுற்றிலும் 30 கி.மீ. பகுதியில் போராட்டம் நடத்தவும் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். சட்டத்தை யார் கையில் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை தடுத்து நிறுத்தும் பக்தர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story