கேஒய்சி விவகாரம்: 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம்?


கேஒய்சி விவகாரம்: 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம்?
x
தினத்தந்தி 18 Oct 2018 7:08 AM GMT (Updated: 2018-10-18T12:38:02+05:30)

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) எனப்படும் வாடிக்கையாளர் விவரங்களை புதிதாக தராவிட்டால், ஆதார் அடிப்படையில் தனிப்பட்ட விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

புதுடெல்லி

மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2016 செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.

ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.

இந்நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது எனசுப்ரீம் கோர்ட்  தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.

தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இதுதொடர்பாக தொலைத்தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story