போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு


போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு
x

சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களையும் திரும்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.


பம்பை,


சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது.
 
கோவிலுக்கு செல்லும் வாகனங்களை பக்தர்கள் சோதனையிடும் சம்பவம் நிகழ்ந்தது. நேற்று முன்தினம் கோவில் திறக்கப்பட்ட நிலையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். போராட்டம் காரணமாக தடியடி நடந்தமையால் பதற்றமான நிலை நீடிக்கிறது. அங்கு 144–ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22–ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார், அவரை பக்தர்கள் தடுத்ததால் கோவிலுக்கு செல்லாமல் திரும்பினார். 

பெண் செய்தியாளர்
 
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் மற்றொரு பெண்ணும் இன்று சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை சென்றடைந்தனர். கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இருவரும் சன்னிதானத்திற்கு வருவதை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் அங்கு போராட்டம் மேற்கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர். இருப்பினும் அய்யப்ப பக்தர்கள் பெண்களை பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்திரமாக கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் அய்யப்ப கோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். போலீஸ் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

சபரிமலையில் போலீஸ் எந்தஒரு பிரச்சனையும் ஏற்படுத்தாது. பக்தர்களுடன் நாங்கள் மோதலை விரும்பவில்லை. நாங்கள் சட்டத்தை மட்டுமே பின்பற்றுகிறோம். நாங்கள் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையை மேற்கொள்வோம் என இன்பெக்டர் ஜெனரல் ஸ்ரீஜித் கூறினார். 

திருப்பி அனுப்ப உத்தரவு

இரு பெண்களும் சன்னிதானத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் கேரள மாநில அரசு அவர்களை திருப்ப அனுப்ப உத்தரவிட்டது. கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதல்ல. அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் செய்தியாளர்; இது லட்சக்கனகான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். போராட்டம் நடத்துவதற்கான இடம் இதுகிடையாது எனவும் கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story