சபரிமலை விவகாரம் : 3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்


சபரிமலை விவகாரம் : 3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
x
தினத்தந்தி 19 Oct 2018 7:20 AM GMT (Updated: 2018-10-19T12:50:35+05:30)

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது

புதுடெல்லி

 இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் பயணம் செய்தனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டன.

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கவிதா அவர் ஆந்திரம் மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்த்து உள்ளது.

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் அந்தப் பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஆனால், ஒரு பக்கம் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. 

பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை கோயில் தந்திரி கூறியதை அடுத்து, 2 பெண்களும் திரும்பி செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து  போலீசார்  2 பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இதை தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் போராட்டதை  கைவிட்டனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக  3 மாநில  தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு  உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் தேவையான பாதுகாப்பு  ஏற்பாடுகளை சபரிமலையில் செய்யவேண்டும்.  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தேவைப்பட்டால் சில தடை உத்தரவுகளை  பிறப்பிக்கலாம். சமூக வலைதளங்கள், வலைதளங்கள் சேவையை முடக்கலாம்  எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story