ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் வாக்குறுதி


ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் வாக்குறுதி
x
தினத்தந்தி 20 Oct 2018 11:00 PM GMT (Updated: 2018-10-21T01:25:43+05:30)

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஐதராபாத், 

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள நிர்மல் மாவட்டம் பாயின்சா என்ற இடத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தெலுங்கானா மாநிலத்தில் மாற்றம் வரும். இங்கு சந்திரசேகர் ராவின் அரசும், மத்தியில் நரேந்திர மோடி அரசும் அகன்றுவிடும். உங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களுக்கு பொய் வாக்குறுதி தான் வேண்டுமென்றால் சந்திரசேகர் ராவ், நரேந்திர மோடியிடம் செல்லுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.

சந்திரசேகர் ராவ் பல திட்டங்களின் வடிவமைப்பை மாற்றி மதிப்பீட்டை ரூ.38 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் ஊழலில் சிக்கியுள்ளார். இதன் பலன்கள் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சென்றுள்ளது.

இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினர் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும். அவர்களது நிலம் பாதுகாக்கப்படும். ரூ.2 லட்சம் வரை விவசாய கடனை ஒரே நேரத்தில் தள்ளுபடி செய்வோம். பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் வழங்குவோம். வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம்.

பிரதமர் மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நான் 15 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நாங்கள் முன்பு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினோம். அதன்படி ரூ.70 ஆயிரம் கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்தோம்.

மோடி பிராந்திய ரீதியாகவும், மத மற்றும் ஜாதி ரீதியாகவும் மக்களுக்கிடையே வெறுப்பு மற்றும் பகையை பரப்பி நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Next Story