பஞ்சாப் ரெயில் விபத்து: தசரா விழா ஏற்பாட்டாளர்கள் வீடுகள் மீது தாக்குதல், 2-வது நாளாக போராட்டம்

பஞ்சாப் ரெயில் விபத்து சம்பவத்தில் தசரா விழா ஏற்பாட்டளர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,
அமிர்தசரஸ், ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உள்ளூர் மக்கள் இச்சம்பவத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார்கள். விபத்து சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, 4 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனுமதியின்றி ரெயில்வே பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி பெரும் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பும் அவர்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ள போலீஸ் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே அமைச்சர் சித்துவும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் போராட்டம் காரணமாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, ஜோதா பதக் மார்க்கத்தில் ரெயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகளை இலக்காக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். விபத்து சம்பவத்தில் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் அதிகமாக உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story