சபரிமலைக்கு வந்த மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார் ஐப்பசி மாத பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது


சபரிமலைக்கு வந்த மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார் ஐப்பசி மாத பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது
x
தினத்தந்தி 22 Oct 2018 11:30 PM GMT (Updated: 2018-10-23T02:06:24+05:30)

ஐப்பசி மாத பூஜை முடிந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. சபரி மலைக்கு வந்த மேலும் ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டார்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனை அமல்படுத்த கேரள அரசும், தேவசம்போர்டும் தயாரானது. இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அய்யப்ப பக்தர்கள் மற்றும் கேரள எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த 17-ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனத்துக்கு பெண்கள் வந்தால் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

கேரளாவில் நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பகுதியில் கடந்த 5 நாட்களாக 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. அந்த உத்தரவு நேற்று மாலையுடன் திரும்ப பெறப்பட்டது.

இதற்கிடையே சபரிமலைக்கு சாமி தரிசனத்துக்காக வந்த கொச்சியைச் சேர்ந்த ரஹானா பாத்திமா, பெண் நிருபர் கவிதா கோஷி, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுவீட்டி, தலித் பெண் ஆர்வலர் ஒருவர் என 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

18-ம் படி அருகில் போராட்டம் நடத்திய கீழ்சாந்திகள் எனப்படும் பூசாரிகளுக்கு, போராட்டம் நடத்தியதற்கான காரணம் கேட்டு தேவசம்போர்டு சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐப்பசி மாத பூஜையின் கடைசி நாளான நேற்று கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து சக்கரியா என்ற 35 வயதான பெண் எருமேலியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் இருமுடி கட்டாமல் கோவிலுக்கு வந்ததால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. சபரிமலைக்கு வந்த மொத்தம் 12 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் மாத பூஜையின் கடைசி நாளில் நிலக்கல், பம்பை, சபரிமலை, பத்தினம்திட்டை ஆகிய இடங்களில் செய்தி சேகரிக்க குவிந்து இருந்த நிருபர்கள், புகைப்படக்காரர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீஜித் உத்தரவின் பேரில் அனைத்து பத்திரிகையாளர்களும் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

நேற்று காலையில் சபரிமலைக்கு சாமி தரிசனத்துக்காக சென்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் கண்ணீர் மல்க சாமி தரிசனம் செய்தார். ரஹானா பாத்திமா உள்ளிட்ட இளம்பெண்கள் சபரிமலை கோவில் வரை செல்ல பாதுகாப்பு வழங்கியவர் ஸ்ரீஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று வரை நடந்தது. தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர பூஜை, படி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. மாத பூஜை முடிவடைந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

அடுத்த மாதம் (நவம்பர்) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும் போது புதிதாக தேர்வான மேல்சாந்திகள் பணிபுரிவார்கள்.

இதற்கிடையே சபரிமலை நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு ஏதாவது கருத்து கேட்கும் பட்சத்தில் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேவசம்போர்டு கூறியுள்ளது. அதற்கு முன்னதாக ஏதாவது அறிக்கை தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறினர்.

சபரிமலை கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த முஸ்லிம் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா, கொச்சியில் போர்செட்டி என்ற இடத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் தற்போது ரூவிபுரம் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Next Story