சிபிஐ அதிகாரிகள் நீக்கம் விவகாரம் ‘காங்கிரஸ் அற்பமான அரசியல் செய்கிறது’ பா.ஜனதா பதிலடி


சிபிஐ அதிகாரிகள் நீக்கம் விவகாரம் ‘காங்கிரஸ் அற்பமான அரசியல் செய்கிறது’ பா.ஜனதா பதிலடி
x
தினத்தந்தி 24 Oct 2018 3:11 PM GMT (Updated: 24 Oct 2018 3:11 PM GMT)

சிபிஐ அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் அற்பமான அரசியலை செய்கிறது என பா.ஜனதா பதிலடியை கொடுத்துள்ளது.


 
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது தீவிரம் அடையவும் இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.  இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

 ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலை விசாரிக்க அலோக் வர்மா விசாரிக்க முற்பட்டதால்தான் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என காங்கிரஸ் சாடியுள்ளது. ஆனால் இதனை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி திட்டவட்டமாக மறுத்தார். 

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் அற்பமான அரசியலை செய்கிறது என பா.ஜனதா பதிலடியை கொடுத்துள்ளது.
 
பா.ஜனதா எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 
 அற்பமான அரசியலுக்காக குற்றம்சாட்டுகிறார். பிரதமர் மோடியோ, சிபிஐ அமைப்பின் மாண்பை காக்கும் முயற்சியாக இரு அதிகாரிகளை நீக்கி, ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளார். எதிர்பாராத சூழலில் எதிர்பாராத முடிவுகள் எடுப்பது தேவை என்ற நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ப.சிதம்பரம், லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸின் செல்லப்பிள்ளை விஜய் மல்லையா உள்ளிட்டோர் குறித்த வழக்குகளை  தொடர்ந்து விசாரித்து வந்ததால் குறிப்பிட்ட சிபிஐ அதிகாரிகள் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 

பெரும்பாலான வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளை போன்று காங்கிரஸ் கட்சி சித்தரித்து விட்டது. அலோக் வர்மா மற்றும் அஸ்தானா ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியதால் நீக்கப்பட்டனர். சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து சிபிஐ மாண்பை காத்துள்ளது என்று கூறியுள்ளார். 


Next Story