2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கு: சி.பி.ஐ. மனுவுடன் சேர்த்து அமலாக்கப்பிரிவு மனுவும் விசாரிக்கப்படும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கில், சி.பி.ஐ. மனுவுடன் சேர்த்து அமலாக்கப்பிரிவின் மனுவும் பிப்ரவரி 7-ந் தேதி விசாரிக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன.
சுவான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
மேல்முறையீடு
இந்த வழக்குகளை விசாரித்த டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன.
இந்தநிலையில் மத்திய அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி நஜ்மி வாஜ்ரி முன்னிலையான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பிப்ரவரி 7-ந் தேதி விசாரணை
அப்போது அமலாக்கப்பிரிவின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், “ஏற்கனவே கீழ்கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இந்த கோர்ட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அந்த விசாரணைக்கு முன் கூட்டியே தேதி நிர்ணயித்து இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுடன் அமலாக்கப்பிரிவின் இந்த மேல்முறையீட்டு மனுவும் சேர்த்து ஒன்றாக அதே பிப்ரவரி 7-ந் தேதியன்று விசாரிக்கப்படும் என்று கூறினார்.
அத்துடன் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைத்து எதிர் பதில் மனுதாரர்களும் அமலாக்கப்பிரிவின் மனுவின் மீது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story