ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி அளவை குறைக்க இந்தியா முடிவு ; பொருளாதார தடை விதிப்பில் அமெரிக்கா விலக்கு
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி அளவை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதை அடுத்து, பொருளாதார தடை விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
கடந்த நிதியாண்டில் இந்தியா 22 மில்லியன் டன் கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதி செய்தது. நடப்பு நிதியாண்டில் இந்த அளவை 30 மில்லியன் டன் ஆக அதிகரிக்க இந்தியா முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ஈரான் மீதும், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் வரும் 4ஆம் தேதி முதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதில் இருந்து விலக்கு பெறும் வகையில், இந்தியா தரப்பில் அமெரிக்க அரசு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விலக்கு அளிப்பதற்கான நிபந்தனையாக, இந்தியா, ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை 14 முதல் 15 மில்லியன் டன்களாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை 35 சதவீதம் அளவுக்கு இந்தியா குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பொருளாதாரத் தடை விதிப்பில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story