உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்


உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டம், ‘அயோத்தி’ என பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 7 Nov 2018 5:16 PM GMT (Updated: 7 Nov 2018 5:16 PM GMT)

உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது.

அயாத்தி, 

உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இங்குதான் ராமபிரான் அவதரித்த அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நேற்று அயோத்தியில் நடந்த ‘தீபோத்சவ்’ நிகழ்ச்சியில் முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது கவுரவம், மரியாதை மற்றும் பெருமையின் சின்னம்தான் அயோத்தி. ராமபிரான் மூலம் அடையாளம் காணப்படும் இந்த அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது என்பதை உறுதியாக தெரிவிக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். உலகின் எந்த சக்தியாலும் அநீதி இழைக்க முடியாது’ என்றார்.

இதைப்போல மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த யோகி ஆதித்யநாத், ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடியையும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்–சூக், மாநில கவர்னர் ராம் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அலகாபாத்தின் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story