காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்யாதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்


காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்யாதீர்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Nov 2018 3:05 PM GMT (Updated: 20 Nov 2018 3:05 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்யாதீர்கள் என வாக்காளர்களிடம் பிரதமர் மோடி இன்று கேட்டு கொண்டுள்ளார்.

ஜபுவா,

மத்திய பிரதேசத்தில் வருகிற 28ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியின் ஈகோவை நசுக்க மத்திய பிரதேச மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

டெல்லியில் சுல்தான்களின் மிக பெரிய ஆட்சி நடந்தது.  எனினும் 4 தலைமுறைகளுக்கு பின் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கின்றது என நேரு-காந்தி குடும்பத்தினை குறிப்பிட்டு அவர் பேசினார்.  தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் இதே விதியை சந்திக்கும் என்றார்.

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு பற்றி பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம்.

நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன்.  தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர்.  அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர்.  இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.  அந்த கட்சியானது குலைந்து போய் உள்ளது.  அவர்களால் உங்கள் மீது ஆற்றல் செலுத்த முடியாது என்று அவர் பேசினார்.

Next Story