பட்டேல் சிலையை மிஞ்சும் உயரம்: 250 மீட்டரில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டம்

இந்தியாவில் உருவாகும் உயரமான சிலைகள்- கட்டிடங்கள் போட்டியில் 250 மீட்டரில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு திட்டமிட்டு உள்ளார்.
விஜயவாடா,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து பிரிந்ததில் இருந்து மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க முயன்று வருகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.
மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.மேலும் சிபிஐக்கு ஆந்திராவில் தடை விதித்தார்.

தற்போது ஆந்திராவில் அமைய உள்ள அமராவதி தலைநகரில் 250 மீட்டர் உயரம் உள்ள ஆந்திர சட்டசபை கட்டிடத்தை கட்ட திட்டமிட்டு உள்ளார். சமீபத்தில் திறக்கப்பட்ட ‘ஒற்றுமை சிலை’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையின் உயரம் 182 அடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு கட்ட திட்டமிட்டு உள்ள சட்டசபை கட்டிடத்தின் டிசைன் கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இங்கிலாந்தை சேர்ந்த நோர்மா போஸ்டரஸ் என்ற நிறுவனம் அதற்கான கட்டிட வரைபடத்தை அரசிடம் சமர்பித்து உள்ளது. இந்த கட்டிடம் 3 அடுக்கு மாடிகளை கொண்டது. கோபுரம் 250 மீட்டர் உயரத்தில் வானத்தை தொடுவது போல் உள்ளது.
அமராவதியில் கட்டப்படும் சட்டசபை மற்றும் செயலக கட்டிடங்களின் கடைசி வடிவமைப்புகள் சந்திரபாபு நாயுடுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஒற்றுமையின் சிலை திறக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையே பெரிய உயரமான சிலை மற்றும் கட்டிடங்களை கட்ட போட்டி ஆரம்பமாகி உள்ளதால் நாயுடு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 201 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை கட்டப்படும் என அறிவித்து உள்ளார். கர்நாடக அரசு 125 அடி உயர காவேரி அன்னை சிலை அமைக்கப்படும் என அறிவித்து உள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகம் அமைச்சர் நாராயணா கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு கட்டியெழுப்பும் கட்டிடம் தலைகீழான லில்லி பூவைப் போன்ற வடிவமாக இருக்கும். இந்த கட்டிடம் இரண்டு காட்சியகங்களை கொண்டு இருக்கும். முதல் காட்சியகம் 80 மீட்டர் உயரத்தில் இருக்கும். இதில் 300 பேர் அமராவதி நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். 2-வது காட்சியகம் 250 மீட்டர் உயரத்தில் இருக்கும். இதில் 20 பேர் அமராவதி நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். 2 வது காட்சியகம் லிப்ட் வசதியுடன் கண்னாடியால் மூடப்பட்டு இருக்கும். இந்த கட்டிடம் புயல் மற்றும் நிலநடுக்கங்களை தாங்க கூடியதாக அமையும்.

முதல் அமைச்சர் டிசைனில் சிறிய மாற்றங்களை பரிந்துரைத்து உள்ளார். இது இன்னும் இரு தினங்களில் தயாராகி விடும் என கூறினார்.
டெண்டர் அறிவிப்புகளை வெளியிட மூலதன மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story