சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான்; காவல்துறையினர் கிடையாது - கேரள அரசு விளக்கம்

சபரிமலையில் பிரச்சனை செய்தது கிரிமினல்கள்தான் என்றும் காவல்துறையினர் கிடையாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தீர்ப்பை அடுத்து பெண்கள் கோவிலுக்கு சென்ற போது பக்தர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மண்டல பூஜைக்காக கோவில் திறக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடி காட்டியது. 70 பக்தர்களை கைது செய்தது.
இதனையடுத்து பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக விசாரித்து வரும் ஐகோர்ட்டு, அரசுக்கு எச்சரிக்கையை விடுத்து வருகிறது.
'சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும்’ என்று கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ள அரசு, சபரிமலையில் பிரச்னை செய்தது கிரிமினல்கள்தான்; காவல்துறையினர் கிடையாது என தெரிவித்துள்ளது. பிரச்சனையை ஏற்படுத்திய கிரிமினல்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு நேரமாகியதும் மலையில் இருந்து கீழே இறங்க முடியாது என பக்தர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீஸ் அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியது. இதனையடுத்து 70 பேரை கைது செய்தது. பக்தர்கள் ஓய்வுக்காக அமைக்கப்பட்டிருந்த நிழல் பந்தலில் நின்ற பக்தர்களிடம் இவ்வாறு நடந்துக்கொண்டதை அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story