மத்திய அரசுடன் மோதல் போக்கு கூடாது - ரிசர்வ் வங்கிக்கு, நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவுறுத்தல்


மத்திய அரசுடன் மோதல் போக்கு கூடாது - ரிசர்வ் வங்கிக்கு, நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2018 11:30 PM GMT (Updated: 30 Nov 2018 9:39 PM GMT)

ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றும் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்படுகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து அண்மையில் மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் மத்திய அரசின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க நிபுணர் குழுவை நியமிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்குவதை எளிமையாக்கிடவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைந்திடவேண்டும். மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. ஏனெனில் சில துறைகளுக்கு நிதி அதிகமாக தேவைப்படுகிறது. எனவேதான் அனைத்து வித ஆலோசனைகளின் வாயிலாகவும் இதை உறுதி செய்து ரிசர்வ் வங்கியின் கவர்னரை செயலாற்றுவதற்கு தூண்டிவிட்டு வருகிறோம்.

ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிடவேண்டும். எனவே தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவேண்டிய தருணம் இதுவாகும்.

தன்னிடம் எப்போதுமே கையில் அதிக நிதி இருக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுவது தவறானது. மக்கள் கஷ்டப்படும் இக்கட்டான நேரங்களில் நீங்கள் (ரிசர்வ் வங்கி) கையில் அதிகமாக பணம் வைத்திருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்.

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் அதன் விதிகளை மீறியதில்லை. வரம்பை தாண்டிச் செல்வதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story